பழனி அருகே ஓவியங்களால் அழகு பெற்ற அரசுப்பள்ளி


பழனி அருகே ஓவியங்களால் அழகு பெற்ற அரசுப்பள்ளி
x
தினத்தந்தி 28 Sept 2020 8:47 AM IST (Updated: 28 Sept 2020 8:47 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே காவலப்பட்டி அரசுப்பள்ளியில் கற்றல் திறனை மேம்படுத்த சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நெய்க்காரப்பட்டி,

பழனி அருகே காவலப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு காவலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக காவலப்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து காணப்பட்டது.

இதையடுத்து பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்த அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் முடிவு செய்தனர். அதன்படி தலைமை ஆசிரியர் உதவியுடன் அனைத்து ஆசிரியர்களும் சிறு தொகை சேகரித்து பள்ளியின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த முடிவு செய்தனர்.

குறிப்பாக மாணவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்தவும், தனியார் பள்ளிகளை போல் அவர்களுக்கு உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ‘பட்டாம் பூச்சி‘ என்ற அமைப்புடன் இணைந்து பள்ளியை தரம் உயர்த்தும் பணியில் ஆசிரியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர். அதன்படி, பள்ளியின் சுவர்களில் பாடம் சம்பந்தமாக வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மாணவர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல் கூறியதாவது:-

‘பட்டாம்பூச்சி’

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. இதன் விளைவு, குக்கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகள் மூடப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ஆசிரியர்கள் சார்பில் இணைந்து உருவாக்கப்பட்டதுதான் ‘பட்டாம் பூச்சி’ என்ற அமைப்பு. இந்த அமைப்பினர் மூடப்படக்கூடிய நிலையில் உள்ள அரசுப்பள்ளிகள், குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளை தேர்ந்தெடுத்து அங்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்களது பள்ளியில் தொடக்க காலத்தில் சுமார் 150 மாணவர்கள் பயின்றனர். அதன்பிறகு மாணவர் சேர்க்கை குறைந்து காணப்பட்டதால் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாணவர்களுக்கு சுகாதார முறையில் ஆர்.ஓ. குடிநீர், கழிப்பறை, கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டது.

ஓவியங்கள்

மேலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மாணவர்கள் எளிதில் புரியும்படி காணும் சுவர்கள் எல்லாவற்றிலும் பாட குறிப்புகளை ஓவியங்களாக வரைந்து கற்பிக்க முடிவு செய்தோம். இதற்காக கணித சூத்திரங்கள், சாலை விதிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், வரலாறு, புவியியல் தொடர்பான விளக்கங்கள், நாட்டு தேசிய தலைவர்களின் படங்களுடன் அவர்களின் கருத்துகள் பள்ளி சுவர்களில் வரையப்பட்டுள்ளன. இதைத்தவிர மாணவர்களுக்கு படிப்போடு தையல், கூடை பின்னுதல் உள்ளிட்டவையும் கற்று தரப்படுகிறது. விரைவில் தனியார் பள்ளிக்கு இணையாக எங்கள் பள்ளி தரம் உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story