தி.மு.க. போராட்டம் மிகப்பெரிய தோல்வி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


தி.மு.க. போராட்டம் மிகப்பெரிய தோல்வி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 28 Sep 2020 11:00 PM GMT (Updated: 28 Sep 2020 5:27 PM GMT)

தி.மு.க. கூட்டணி கட்சிகளின் போராட்டம் மிகப்பெரிய தோல்வி அடைந்து விட்டது என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பா.ஜனதா கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இணை பொறுப்பாளர் டி.ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.டி.பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, சட்டமன்ற தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சரவண கிருஷ்ணன், நகர தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர்கள் ராஜ்குமார், உமா செல்வி, ஒன்றிய தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜனதா வேகமாக வளர்வதை கண்டு தி.மு.க.வினர் பயத்தில் உள்ளனர். அவர்களது இன்றைய போராட்டம் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது.

மக்கள் இன்று அனைத்து விஷயங்களையும் புரிந்து கொண்டனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக மாற்ற வேண்டும். இதற்கு என்னென்ன மாற்றங்கள் கொண்டு வந்தால் சரியாக இருக்கும் என அறிந்து குழுவை நியமித்து அவர்களுடைய பரிந்துரைகளின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி முடிவு எடுத்துள்ளார். இதனை அனைத்து விவசாயிகளும் வரவேற்கின்றனர். ஆனால், விவசாயிகளை வைத்து அரசியல் நடத்த விரும்புபவர்கள் இதை எதிர்ப்பார்கள்.

தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகளை கேவலப்படுத்தியது தி.மு.க. தான். அவர்கள் தமிழன், விவசாயி என பார்க்க மாட்டார்கள். அரசியல் ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் கேவலப்படுத்துவார்கள். அதனால் அவர்கள் கூறுவதை ஒரு பொருட்டாக எடுக்க வேண்டிய தேவையில்லை.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து கிராமப்புற விவசாயிகளுக்கு புரிய வைப்பதற்காக கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பா.ஜனதாவில் உள்ளவர்கள் பதவியை குறித்து பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. எங்களை பொருத்தவரை தமிழகத்தில் ஆளுகின்ற நிலைக்கு பா.ஜனதாவை கொண்டு வரக்கூடிய பணியில் ஈடுபட்டு உள்ளோம். அதற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story