பெண்ணை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு


பெண்ணை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Sept 2020 3:51 AM IST (Updated: 29 Sept 2020 3:51 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி,

மாங்காடு அடுத்த கோவூர், கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மேரி (வயது 45). இவர் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ராமாபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் (50) என்பவர் குடிபோதையில் மேரியை தன்னுடன் வருமாறு அழைத்தார். அதற்கு மேரி மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ரவீந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேரியை சரமாரியாக குத்தினார். இதில் மேரிக்கு முகம், கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த கத்திக்குத்து விழுந்ததால் அவர் அலறியபடி கீழே விழுந்தார்.

உடனே ரவீந்திரன், அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மேரி சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ரவீந்திரன், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ரவீந்திரன்-மேரி இருவருக்கும் என்ன தொடர்பு?. ரவீந்திரன் எதற்காக மேரியை கத்தியால் குத்திவிட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்? என மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story