ரூ.1½ கோடி நில அபகரிப்பு வழக்கில் சென்னையில் 2 பெண்கள் கைது போலி வாக்காளர் அட்டை தயாரித்து துணிகரம்


ரூ.1½ கோடி நில அபகரிப்பு வழக்கில் சென்னையில் 2 பெண்கள் கைது போலி வாக்காளர் அட்டை தயாரித்து துணிகரம்
x
தினத்தந்தி 29 Sept 2020 3:55 AM IST (Updated: 29 Sept 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ரூ.1½ கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதற்காக போலி வாக்காளர் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை,

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் வில்சன் செல்வசேகர். தொழில் அதிபரான இவருக்கு சொந்தமான நிலம், சென்னை பள்ளிக்கரணை ராம்நகர் பகுதியில் உள்ளது. ரூ.1½ கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை சிலர் ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்பனை செய்துவிட்டனர்.

இது தொடர்பாக வில்சன் செல்வசேகரின் அதிகார முகவரான சரவணன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் நிலஅபகரிப்பு தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கள லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில், நிலஅபகரிப்பில் ஈடுபட்டதாக சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சொர்ணலதா (வயது 49), லலிதா (52) ஆகிய 2 பெண்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவரும் சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகம் அருகே பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வந்தனர்.

இவர்கள் இருவரும் தொழில் அதிபர் வில்சன் செல்வசேகரின் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியதோடு, 2 பேருக்கு விற்றும் விட்டனர். நிலத்தை வாங்கியதும் 2 பெண்கள் என்று தெரியவந்துள்ளது. அதுபற்றியும் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலத்தை அபகரிக்க ஆள்மாறாட்டம் செய்வதற்காக, நில உரிமையாளர் பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி வாக்காளர் அட்டை தயாரித்து கொடுத்த நபரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story