காதலுக்கு இருவீட்டு பெற்றோர் எதிர்ப்பால் தகராறு: காதலி இறந்த அதிர்ச்சியில் காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை


காதலுக்கு இருவீட்டு பெற்றோர் எதிர்ப்பால் தகராறு: காதலி இறந்த அதிர்ச்சியில் காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 Sept 2020 4:04 AM IST (Updated: 29 Sept 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

காதலுக்கு இருவீட்டு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியில் காதலி தற்கொலை செய்ததால் அதிர்ச்சியில் காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை ஸ்ரீரங்கம்மா தெருவைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் திவ்யா(வயது 20). இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

அதேபோல் பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் அய்யப்பன் (21). இவர், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

அய்யப்பன்-திவ்யா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் அறிந்த இருவீட்டு பெற்றோரும் இருவரையும் கண்டித்தனர். தங்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதன்பிறகு காதலர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திவ்யா, தனது வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கிய பிறகு மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், திவ்யாவை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், திவ்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று காலை காதலி இறந்த தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன், தனது வீட்டில் மின்விசிறியில் தாயின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவ-மாணவிகள் இருவரும் அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story