விவசாயிகளை ஆதரித்து போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் ஆட்சியை கலைத்தாலும் கவலையில்லை நாராயணசாமி ஆவேசம்


விவசாயிகளை ஆதரித்து போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் ஆட்சியை கலைத்தாலும் கவலையில்லை நாராயணசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 29 Sept 2020 6:25 AM IST (Updated: 29 Sept 2020 6:25 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளை ஆதரித்து போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் ஆட்சியை கலைத்தாலும் கவலையில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கான விளை பொருட்களை வர்த்தக மயமாக்குவது, உரிய விலை அளிப்பது, அத்தியாவசிய பொருட்கள் சட்ட மசோதாவை திருத்தம் செய்வது ஆகிய 3 மசோதாக்களை நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசு பெரும்பான்மை இருப்பதால் அது நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்கள் அவையில் இந்த சட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின.

ஆனால் இவற்றை பொருட்படுத்தாமல் மசோதாவை துணை சபாநாயகர் நிறைவேற்றினார். இதனால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மேல்சபையில் ஆளும் மத்திய பா.ஜ.க. அரசு ஜனநாயக படுகொலை செய்துள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என வலியுறுத்தி மனு கொடுத்தபோதிலும் அதையும் மீறி ஜனாதிபதி அவசர, அவசரமாக ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அரியானா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களை எந்த மாநிலத்திற்கும் கொண்டு செல்லலாம். சிறு, குறு விவசாயிகளின் நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம். எந்த நாட்டிற்கும் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம். இதன் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். ஆனால் விவசாயிகளுக்கு உரிய பணம் கிடைக்காது. அந்த லாபம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சென்று சேரும். இந்த சட்டத்தை கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

ஏற்கனவே பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் வகையில் மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. தொழிலாளர் சட்டங்களிலும் கை வைத்துள்ளனர். எனவே மத்திய அரசை எதிர்க்க விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் தயாராக வேண்டும்.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் அறிவித்ததும் கவர்னர் கிரண்பெடி எனக்கு கடிதம் அனுப்பினார். இந்த ஆர்ப்பாட்டம் விதிகளுக்கு உட்பட்டு தான் நடத்தப்படுகிறது. அனைவரும் சமூக இடைவெளி கடைபிடித்து நிற்கின்றனர். வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்த படிதான் கலந்து கொண்டுள்ளனர். முதலில் நான் காங்கிரஸ் கட்சியின் தொண்டன். அதன்பிறகு தான் மாநில முதல்-அமைச்சர். எனவே என்னிடம் பூச்சாண்டி காட்டும் வேலை வேண்டாம். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் போராட்டத்தில் கூட அம்மாநில முதல்-அமைச்சர் கலந்து கொண்டுள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்காக புதுவை மாநில காங்கிரஸ் அரசை கலைத்தாலும் கவலையில்லை. மக்கள் நன்மைக்காக, விவசாயிகளுக்காக ஆட்சியை இழக்க தயார். இது ஆரம்பம் தான். இன்னும் கிராமம், கிராமமாக சென்று நாங்கள் போராட்டம் நடத்த உள்ளோம். விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 மசோதாக்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story