மன்னார்குடியில், 2-வது நாளாக பலத்த மழை - குறுவை அறுவடை பணிகள் பாதிப்பு


மன்னார்குடியில், 2-வது நாளாக பலத்த மழை - குறுவை அறுவடை பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 29 Sept 2020 3:30 AM IST (Updated: 29 Sept 2020 8:55 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. இதனால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப் பட்டுள்ளது.

மன்னார்குடி,

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் இடை யிடையே மழை பெய்து வருகிறது. 3 மாவட்டங்களிலும் தற்போது குறுவை அறுவடை மற்றும் சம்பா, தாளடி சாகுபடிக்கான ஆரம்ப கட்ட பணிகள் விறு,விறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பல ஆண்டுகளுக்கு பிறகு 3 மாவட்ட விவசாயிகளும் இந்த ஆண்டு 3 போக சாகுபடியை மேற்கொண்டு வருகிறார்கள். மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பதும், இடையிடையே மழை பெய்து வருவதும் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டி வருகிறது.

இந்த நிலையில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று தொடர்ந்து 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. நேற்று முன்தினம் மாலையும் இதே போல ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது.

இதனால் நகரத்தில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. நிலத்தடி நீர்மட்டம் உயர் வதற்கும், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்புவதற்கும் இந்த தொடர் மழை உதவும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் குறுவை அறுவடை பணி களுக்கு தொடர் மழை பாதிப்பை ஏற்படுத்தி இருப்ப தாக விவசாயிகள் தெரிவித்த னர்.

திருவாருர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வாட்டர், நல்லூர், குறிச்சி, புத்தகரம், மண்ணுக்குமுண்டான், கெழுவத்தூர், வெங்கத்தான்குடி ஆகிய பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆனால் தற்போது பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. இந்த மழையால் மகசூல் பாதித்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story