கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கும் கன்று குட்டிகளை கேட்டு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் உள்பட 107 பேர் கைது
முசிறி அருகே தலைமலை பெருமாள் கோவிலுக்கு நேர்த்திக் கடனாக வழங்கும் கன்று குட்டிகளை கேட்டு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் உள்பட 107 பேர் கைது செய்யப்பட்டனர்.
முசிறி,
திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லையில் பிரசித்தி பெற்ற தலைமலை கோவில் அமைந்துள்ளது. மலை உச்சியில் சஞ்சீவிராய நல்லேந்திர பெருமாள் உள்ளார். இதன் அடிவாரம் திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டை ஒன்றியம் அஞ்சலம் ஊராட்சியை சேர்ந்த நீலியாம்பட்டி கிராமத்தில் உள்ளது.
இங்குள்ள பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கன்று குட்டிகளை விடுவது வழக்கம். அந்த கன்று குட்டிகள் மகளிர் சுயஉதவி குழுவினருக்கும், கிராமகோலில் பூசாரிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது அஞ்சலம் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் உள்ள நிலையில் இதுவரை குறைந்த சுயஉதவி குழு பெண்களுக்கு மட்டுமே கன்றுக் குட்டிகள் வழங்கி உள்ளதாகவும், சுய உதவி குழு பெண்கள் அனைவருக்கும் கன்று குட்டிகள் வழங்கவேண்டும். வெளியூரிலிருந்து வரும் பூசாரிகளுக்கு கன்று குட்டிகள் வழங்கக் கூடாது என வலியுறுத்தி நேற்று முசிறி கைகாட்டியில் இருந்து மகளிர் குழு பெண்கள் ஊர்வலமாக சென்று முசிறி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரம்மானந்தம், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சுயஉதவிக் குழுவினர் தாசில்தார் சந்திர தேவநாதனை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்து மனுக்கள் அளித்தனர்.
கொரோனா வைரஸ் பரவும் தற்போதைய சூழலில் தடை உத்தரவை மீறி அனுமதி இன்றி ஊர்வலமாக சென்று தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட சுய உதவிகுழுவை சேர்ந்த பெண்கள் உள்பட 107 பேரை போலீசார் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story