மதுரையில், 2 குழந்தைகள் எரித்துக்கொலை; தாய் தற்கொலை - குடும்ப தகராறில் பயங்கரம்
மதுரையில் குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகளை எரித்துக்கொன்று விட்டு, தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை,
மதுரை திடீர் நகர் மேலவாசல் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவர் ஓட்டலில் மீதம் உள்ள உணவுகளை வாங்கி விற்பனை செய்து வந்தார். மேலும் மதுரை மாநகராட்சியில் தினக்கூலி துப்புரவு பணியாள ராகவும் வேலை செய்தார்.
மதுரை ஒத்தக்கடை ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(32). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வர்ஷிகாஸ்ரீ(4), வர்னிகாஸ்ரீ(1½) என்று 2 பெண் குழந்தைகள். பல மாடிகளைக்கொண்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இவர்கள் வசித்து வந்த வீடானது தரைத்தளத்தில் உள்ளது.
சமீப காலமாக பாண்டி எந்த வேலைக்கும் சரியாக செல்லவில்லை என்றும், தினமும் மது குடித்துவிட்டு வந்து தமிழ்ச்செல்வியிடம் தகராறு செய்து அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கணவருடன் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு அவ்வப்போது சென்றுள்ளார். பெற்றோர் அவரை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பாண்டி, மது போதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதன் பின்னர் அவர் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனவருத்தம் அடைந்த தமிழ்ச்செல்வி நள்ளிரவு நேரத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்வது என விபரீத முடிவு எடுத்துள்ளார். உடனே அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீதும், தனது குழந்தைகள் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இந்த கொடூர செயலால் 2 குழந்தைகளும் அலறியபடி அங்கும் இங்கும் ஓடினார்கள். இதே போல் தமிழ்ச்செல்வி உடலிலும் தீ பரவியது. இதை கேட்டு அக்கம்பக்கத்து குடியிருப்பு வீடுகளில் வசித்தவர்கள் பதறியபடி ஓடிவந்தனர். அவர்கள் 3 பேரின் உடலில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த திடீர்நகர் போலீசாரும் விரைந்து வந்தனர்.
அதற்குள் சம்பவ இடத்திலேயே மூத்த குழந்தை வர்ஷிகாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் பலத்த தீக்காயத்துடன் போராடிய மற்றொரு குழந்தையையும், தமிழ்ச்செல்வியையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீக்காய தீவிர சிகிச்சை பிரிவில் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலையில் அடுத்தடுத்து குழந்தை வர்னிகாஸ்ரீயும், தமிழ்ச்செல்வியும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளுக்குள் தமிழ்ச்செல்வி தற்கொலை செய்திருப்பதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
இதுதொடர்பாக தமிழ்ச்செல்வியின் கணவர் பாண்டியை பிடித்து போலீசார் விசாரித்தனர். பாண்டி மதுபோதையில் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், அதன் பின்னர் சம்பவம் பற்றி அறிந்துதான் வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
கணவருடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story