இதுவரை 19 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று: சேலத்தில் வேகமாக பரவும் கொரோனா - சமூக இடைவெளி, முககவசம் இல்லாமல் வீதியில் நடமாடும் மக்கள்
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 19 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றியும், முக கவசம் அணியாமலும் வீதியில் நடமாடுவதால் நோய் தொற்று அதிகரிக்கும் சூழல் உள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில் அதிவேகமெடுத்த கொரோனா பரவல் இடையில் சற்று குறைந்தது. அதன்பிறகு தளர்வில்லா முழு ஊரடங்கு, சமூக இடைவெளி மற்றும் முக கவசத்தை மக்கள் சரியாக பயன்படுத்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஆனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சேலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வேகமாக பரவும் கொரோனாவாலும், கொரோனாவுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக 5 முதல் 8 வரை இருப்பதாலும் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனிடையே கடந்த சில வாரங்களாக வீடுகளில் இருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் சரிவர ஊரடங்கு தளர்வு இருந்தாலும் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்றாமல் உள்ளனர். குறிப்பாக வணிக நிறுவனங்கள், இறைச்சி கடைகளுக்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வருவதாகவும், இதனால் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கொரோனாவுக்கு முதியவர்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இருதய நோய், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதிக அளவில் உயிரிழக்க நேரிடுகிறது. எனவே முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் அனைவரும் தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து சென்றால் மட்டுமே கொரோனாவை ஓரளவு தடுக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story