கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: மின்னல் தாக்கி அக்காள்-தம்பி பலி


கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: மின்னல் தாக்கி அக்காள்-தம்பி பலி
x
தினத்தந்தி 29 Sept 2020 10:30 AM IST (Updated: 29 Sept 2020 11:08 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் அக்காள்-தம்பி பலியாகினர்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூரில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை 4 மணி அளவில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.

பின்னர் 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது.

இதேபோல் பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, புவனகிரி மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதற்கிடையே மின்னல் தாக்கியதில் அக்காள்-தம்பி பலியானார்கள். அதுபற்றிய விவரம் வருமாறு:-

புதுப்பேட்டை அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு நிஷா(வயது 13) என்ற மகளும், கவியரசன்(11) என்ற மகனும் இருந்தனர். நிஷா புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், கவியரசன் மணப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பும் படித்துள்ளனர்.

நேற்று நிஷாவும், கவியரசனும் தங்களுக்கு சொந்தமான மாடுகளை, அதே பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். பின்னர் மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியதும், அவர்கள் மாடுகளை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் 2 பேர் மீதும் திடீரென மின்னல் தாக்கியது.

இதில் நிஷாவும், கவியரசனும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியாகினர். இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்னல் தாக்கியதில் அக்காள்-தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story