மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்? கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. விளக்கம்


மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்? கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. விளக்கம்
x
தினத்தந்தி 29 Sept 2020 10:30 AM IST (Updated: 29 Sept 2020 11:08 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்? என்று திருமாவளவன் எம்.பி. கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விளக்கம் அளித்தார்.

கடலூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதற்கு ஆதரவு அளித்த மாநில அரசை கண்டித்தும் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நகர தி.மு.க. சார்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நரேந்திரமோடி அரசு விவசாயம் தொடர்பாக 3 அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் மட்டும் தான் இந்த சட்டங்களை எதிர்க்கிறது என்பது போன்ற தோற்றத்தை ஆளுங்கட்சியினர் ஏற்படுத்த பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த, அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அகாலி தளம் கட்சி, அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது. பெண் மந்திரி, தனது பதவியையும் தூக்கி எறிந்து விட்டார். கூட்டணியில் உள்ள கட்சியே இதை எதிர்க்கிறது.

கட்சி சார்பற்ற விவசாய அமைப்புகள் இந்தியா முழுவதும் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஏன்? இந்த சட்டத்தை எதிர்க்கிறோம். மோடியை, பாரதீய ஜனதா கட்சியை, தேர்தல் அரசியலுக்காக இந்த சட்டங்களை எதிர்க்கவில்லை. நடைபெற உள்ள தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் அல்ல. சட்டமன்ற தேர்தல்.

தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக, பாரதீய ஜனதா கட்சிக்காக, பிரதமர் நரேந்திரமோடிக்காக எதிர்க்கவில்லை. நாட்டை காப்பதற்காக, விவசாய பெருங்குடி மக்களை காக்க, உலகத்தை காப்பாற்ற தான் இந்த சட்டங்களை எதிர்க்கிறோம்.

3 காரணங்களுக்காக இந்த சட்டத்தை எதிர்க்கிறோம். முதலாவது, இந்த சட்டம் முழுமையாக விவசாய பெருங்குடி மக்களுக்கு எதிரானது. 2-வது விவசாயம் என்பது மாநில அரசாங்கத்தோடு தொடர்புடையது. மாநில அரசுகள் தான் இதை தீர்மானிக்க முடியும். ஆனால் மாநில அரசுகளை ஒரு பொருட்டாக மதிக்காமல், மத்திய அரசு, தன்னிச்சையாக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

3-வது இந்த சட்டத்தை நிறைவேற்றிய முறையும் ஜனநாயகத்திற்கு புறம்பானது. இந்த 3 காரணங்களுக்காக நாம் இதை எதிர்க்கிறோம். பல காரணங்கள் இருந்தாலும், இதை முதன்மை காரணங்களாக நாம் கருதுகிறோம். இந்த சட்டம் சிறு, குறு விவசாயிகள், பெரு விவசாயிகளுக்கு எதிரானது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், சிறு, குறு விவசாயிகளின் நிலங்கள் அனைத்தும் பெரு முதலாளிகளின் கைக்கு ஏதோ ஒரு வகையில் மாறும்.

உலக நாடுகளில் எந்த நாட்டிற்கு போனாலும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடை இருக்கக்கூடாது. முதலீடு செய்வதற்கு தடை இருக்கக்கூடாது என்பதற்காக கண்டறியப்பட்ட ஒரு பொருளாதார கொள்கை தான் உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார்மயமாதல். கொள்ளை லாபம் அடிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் உள்ள ரேஷன் கடையை மூட போகிறார்கள். உணவு பாதுகாப்பு கழகத்தையும் மூட போகிறார்கள். 30 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் மூலம் வருகிறது. சாராய கடையை அரசு நடத்துகிறது. பள்ளிக்கூடத்தை தனியார் நடத்துகிறார்கள்.

உலக சந்தைக்காக உணவு உற்பத்தி செய்யக்கூடிய நிலை ஏற்படும். நமக்கான உற்பத்தியாக இருக்காது. என்ன விவசாயம் செய்ய வேண்டும் என்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் முடிவு செய்யும். இந்த சட்டம் யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது. உணவு பொருட்களை பதுக்கி விலையை உயர்த்துவார்கள். இடைத்தரகர்களை ஒழிக்க இந்த சட்டத்தை கொண்டு வருவதாக மோடி சொல்கிறார். ஆனால் பெரிய முதலாளிகள் இடைத்தரகராக செயல்படுவார்கள்.

தேர்தல் செலவுக்காக அவர்கள் முதலாளிகளிடம் இருந்து ஒரு தொகையை பெற்றுக்கொள்கிறார்கள். விவசாயத்தை நம்முடையை கைகளில் இருந்து பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது தான் இந்த சட்டங்கள், சிறு, குறு விவசாயிகளை அந்த தொழிலில் இருந்து விரட்டி அடிப்பது தான் இந்த சட்டம். தமிழக அரசு இந்த சட்டங்களை எதிர்த்து இருக்க வேண்டும். ஆனால் அதை நியாயப்படுத்தும் இடத்தில் இருக்கிறார்கள்.

ஒரே தேசம், ஒரே கலாசாரம் என்பது போல், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்கிற நிலையை கொண்டு வர பிரதமர் நரேந்திரமோடி முயற்சி செய்கிறார். மாநில கட்சிகள் வலிமையாக இருப்பதால் ராஜ்ய சபாவில் சட்டத்தை கொண்டு வர முடியவில்லை. இந்த சட்டத்தை அடாவடி தனமாக நிறைவேற்றி இருக்கிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தின்படி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தேர்தல் உறவுகளுக்காக அல்ல, விவசாயிகளை பாதுகாக்க ஒருங்கிணைந்து இருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் எம்.பி. பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மோடி அரசு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் பதவி விலக வேண்டும். மோடிக்கு ஒரு முகம், மக்களுக்கு ஒரு முகமாக தமிழக முதல்-அமைச்சரின் நடவடிக்கை உள்ளது. அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். சுதந்திரமாக செயல்பட முடியாமல் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம் என்றார்.

Next Story