திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன், ஆதார் கார்டுகளை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்
பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் தங்களது ரேஷன், ஆதார் கார்டுகளை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒப்படைக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்திக்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்காக புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அந்த புகார் பெட்டியில் போட்டுச்சென்றனர்.
அப்போது ஆத்தூர் தாலுகா போடிகாமன்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது ரேஷன் மற்றும் ஆதார் கார்டுகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நடத்தினர். இதை பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சொக்கலிங்கபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் முன்னோர்களும் இங்கு தான் வசித்தார்கள். இந்த நிலையில் ஒருசிலர் நாங்கள் வசிக்கும் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி என்று கூறி நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகார் கொடுத்தனர். அவர்களும் எங்கள் பகுதிக்கு வந்து ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளும்படி கூறினர்.
ஆனால் நாங்கள் வசிக்கும் பகுதி ஆக்கிரமிப்பு பகுதி அல்ல. மேலும் அந்த இடத்துக்கு பட்டா கேட்டு கடந்த பல ஆண்டுகளாக விண்ணப்பித்து வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. இந்தநிலையில் தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள 15 நாள் கெடு விதித்துள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் நிலை உள்ளது. எனவே தான் ரேஷன், ஆதார் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைப்பதற்காக வந்தோம் என்றனர்.
இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கோரிக்கைகளை மனுவாக எழுதி புகார் பெட்டியில் போட்டுச்செல்லும்படி அறிவுறுத்தினர். அதன் பின்னர் கிராம மக்கள் புகார் பெட்டியில் தங்களின் மனுவை போட்டுச்சென்றனர்.
பின்னர் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் புகார் பெட்டியில் ஒரு மனுவை போட்டுச்சென்றனர். அந்த மனுவில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களின் பணிக்காலம் நிறைவடைந்து விட்டதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்த பணியை நம்பியே நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது பணியில்லை என்று அதிகாரிகள் கூறுவது எங்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே எங்கள் பணிக்காலத்தை நீட்டிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் மூத்தகள்ளர்குடி ஒருங்கிணைப்பு நலச்சங்கம் சார்பில் புகார் பெட்டியில் ஒரு மனு போடப்பட்டது. அந்த மனுவில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு (ஓ.பி.சி.) மருத்துவ படிப்பில் சேர கடந்த 35 ஆண்டுகளாக இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவ படிப்பை படிக்க விரும்பும் மாணவர்களின் கனவு நிறைவேறாமலேயே உள்ளது. எனவே இந்த ஆண்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரையும் சேர்ப்பதுடன், அவர்கள் மருத்துவ படிப்பில் சேரவும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story