கோவை மாநகரில் 21 இடங்களில் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்


கோவை மாநகரில் 21 இடங்களில் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2020 11:45 AM IST (Updated: 29 Sept 2020 11:37 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகரில் 21 இடங்களில் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று காலை நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதா மூலம் ஏழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் விவசாய துறையிலும் நுழைந்து விடும். இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய தமிழக அரசு மவுனம் காத்து மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. விவசாயத்தை அழிக்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு எதை கொண்டு வந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டம் இது என தெரிந்தும் அ.தி.மு.க. ஆதரிக்கிறது. அ.தி.மு.க. டெல்லி மேல் சபை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் இந்த சட்டத்தின் தீங்குகளை எடுத்து சொல்லியும், அதை கேட்காமல் தமிழக முதல்-அமைச்சர் இந்த திட்டம் நன்மை அளிக்கும் திட்டம் என்று சொல்வதோடு பிறரையும் சொல்ல வைக்கிறார்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டம் என தெரிந்தும் தனிப்பட்ட சில பிரச்சினைகளுக்காக அ.தி.மு.க. அரசு விவசாயிகளின் உரிமைகளை காவு கொடுக்கிறது. தமிழக அரசு இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும். மக்களிடம் உண்மையை பேச வேண்டும். மத்திய அரசு இனியும் செவி சாய்க்கவில்லை என்றால், ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று பெரிய புரட்சிகளை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த திட்டங்களால் இலவச மின்சாரம் கிடைக்காது. கூட்டுறவு வங்கிகள் மூடப்படும் நிலை ஏற்படும். மத்திய அரசு எதிர்கட்சிக்காக இல்லாமல், விவசாயிகளுக்காக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. சார்பில் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மாரிச்செல்வன் மற்றும் வக்கீல் கணேஷ்குமார், முருகன் மற்றும் சவுந்திரகுமார், சீனிவாசன், வக்கீல் கருப்பசாமி(காங்), ஆர்ஆர்.மோகன்குமார், ஆடிட்டர் அர்ஜூன் ராஜ், கணபதி செல்வராஜ் (ம.தி.மு.க.), ராமமூர்த்தி (மார்க்சிஸ்டு கம்யூ.), சுந்தரம் (இந்திய கம்யூ.), தனபால், கருப்பசாமி, வடிவேல்(கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி), இலக்கியன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), ஜெம் பாபு (மனிதநேய மக்கள் கட்சி) , முத்துகுமார் (ஆதிதமிழர் பேரவை), ஆறுச்சாமி (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), பஷீர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), காஜா உசேன் (எஸ்.டி.பி.ஐ), சிற்றரசு (திராவிடர் கழகம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்கெட் மனோகரன் தலைமை தாங்கினார். இதில் கோவை போஸ், சி.வி.சி.குருசாமி, உமாபதி(காங்) மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தங்க நகை தொழிலாளர் சங்க தலைவர் குமார் திடீரென்று மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை கிழக்கு மாநகர் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பாபு, பூவிந்தன் சின்னசாமி, கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம், பீளமேடு ரொட்டிக்கடை மைதானம், பாப்பநாயக்கன்பாளையம், சவுரிபாளையம், காந்திபுரம், ராமநாதபுரம், கணபதி உள்பட கோவை மாநகரில் 21 இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்கள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவு பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பெரியநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் அறிவரசு தலைமை தாங்கினார். மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், நாயக்கன்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் சின்னராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், பெரியநாயக்கன்பாளையம் நகர தலைவர் கோவிந்தராஜ், சுடர்விழி, ஆனந்தி, நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story