வரதட்சணை கொடுமை: கலெக்டர் அலுவலகத்தில் புதுப்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
வரதட்சணை கொடுமை காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் புதுப்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களை போலீசார் சோதனை செய்து, அலுவலகத்துக்குள் அனுமதிக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு இளம்பெண் ஒருவர் வந்தார். மேலும் அவரது கையில் பெட்ரோல் கேன் இருந்தது. சிறிது நேரத்தில் அவர் திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரது கையில் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கினர். பின்னர் அந்த இளம்பெண்ணை, காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர், காரமடையை சேர்ந்த சித்ரா(வயது 20) என்பதும், வரதட்சணை கொடுமையால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் அவருக்கு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, சித்ராவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. அதன்பின்னர் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை கணவர் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர், கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்து உள்ளார். மேலும் தற்கொலைக்கும் முயன்று உள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story