குமரி சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு - போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
குமரி மாவட்ட சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதை போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று நாகர்கோவிலில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பா.ஜனதா, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்க அலுவலகங்கள், முக்கியப்பகுதிகள் அனைத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு இருந்தது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று வழக்கத்தைவிட அதிகமாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் மாவட்ட சுற்றுலாத்தலங்கள், ஆன்மிகத் தலங்கள் போன்றவற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
அதே சமயம் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மணல் மூடைகளை அடுக்கி போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சோதனைச்சாவடியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது அவர் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், ஆவுடையப்பன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில் சுரேஷ், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உடனிருந்தனர்.
இதே போல் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story