சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வீடு வீடாக சென்று குறை கேட்டார்


சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வீடு வீடாக சென்று குறை கேட்டார்
x
தினத்தந்தி 29 Sept 2020 12:15 PM IST (Updated: 29 Sept 2020 12:05 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் வடக்கு கண்ணங்குளம் பகுதியில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வீடு, வீடாக சென்று குறை கேட்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடக்கு கண்ணங்குளத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தி.மு.க. சார்பில் வடக்கு கண்ணங்குளம் மக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களை சந்தித்து குறை கேட்டார். அப்போது பொதுமக்கள், “நாங்கள் பல ஆண்டுகளாக போதிய குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் சாலை வசதியும் சரிவர இல்லை. சில வீடுகளில் இன்னும் மின்சார வசதி இல்லாமல் உள்ளது. எனவே இதுபோன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும். எங்களுக்கு பட்டா வாங்கி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றனர்.

அதைத்தொடர்ந்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறுகையில், “வடக்கு கண்ணங்குளத்தில் முதலில் சாலை, மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் ஓடை உள்ளிட்ட வசதிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு மக்களுக்கு பட்டா கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.பின்னர் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர். அந்த மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். மேலும் அங்குள்ள ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி பொதுமக்களின் கோரிக்கைகளை சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. எழுதி வைத்துக் கொண்டார். அப்போது மாநகர செயலாளர் மகேஷ், வக்கீல் சதா, பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவுது ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story