கண்டமனூர் அருகே மகப்பேறு உதவித்தொகை திட்டத்தில் ரூ.3 லட்சம் கையாடல் நர்சு-கணவர் மீது வழக்கு


கண்டமனூர் அருகே மகப்பேறு உதவித்தொகை திட்டத்தில் ரூ.3 லட்சம் கையாடல் நர்சு-கணவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Sep 2020 12:00 AM GMT (Updated: 30 Sep 2020 12:00 AM GMT)

கண்டமனூர் அருகே மகப்பேறு உதவித்தொகை திட்டத்தில் ரூ.3 லட்சம் கையாடல் செய்த நர்சு மற்றும் அவருடைய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே மேலப்பட்டியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கும் ரூ.18 ஆயிரம் உதவித்தொகையை பயனாளிகளுக்கு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக சுகாதாரத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன.

அதன்பேரில் கண்டமனூர் வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) டாக்டர் சுரேந்தர் ஆய்வு செய்தார். இதில் தகுதியான பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்காமல் போலியான பயனாளிகள் பெயரில் உதவித்தொகை வழங்கப்பட்டு இருந்தது.

மேலும், இந்த துணை சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றும் கல்பனா, தனது கணவர் கதிரவ பெருமாள் என்பவருடன் கூட்டுச்சதி செய்து 32 பயனாளிகளுக்கான உதவித்தொகையை போலியான பயனாளிகள் பெயரில் பெற்று ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

இதில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தை கல்பனா தனது வங்கிக் கணக்கிலும், ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்தை தனது கணவரின் வங்கிக் கணக்கிலும் பெற்று இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியிடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேந்தர் புகார் செய்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டிச்செல்வம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த கையாடல் குறித்து கல்பனா, கதிரவ பெருமாள் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 32 பயனாளிகளில் 12 பேர் கர்ப்பிணிகளாக இருந்து மகப்பேறு உதவித்தொகைக் காக விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கான உதவித்தொகையை வேறு நபர்களின் பெயர்களில் பெற்று கையாடல் செய்துள்ளதும், மற்ற 20 பயனாளிகளின் பெயர் விவரங்கள் போலியானவை என்றும் தெரியவந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்தே அவர்கள் இந்த கையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணியில் வேறு யாரெல்லாம் உள்ளார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story