கொரோனா சிகிச்சை பெறுபவரின் குடும்பத்துக்கு அதிர்ச்சி தந்த அரசு மருத்துவமனை: இறந்ததாக கூறி வேறு ஒருவரின் உடல் அனுப்பி வைப்பு - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம்


கொரோனா சிகிச்சை பெறுபவரின் குடும்பத்துக்கு அதிர்ச்சி தந்த அரசு மருத்துவமனை: இறந்ததாக கூறி வேறு ஒருவரின் உடல் அனுப்பி வைப்பு - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம்
x
தினத்தந்தி 30 Sept 2020 9:44 AM IST (Updated: 30 Sept 2020 9:44 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவரின் வீட்டுக்கு, இறந்த வேறு ஒருவரின் உடலை அனுப்பி வைத்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 9,097 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். 8,504 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். இதில் நேற்று முன்தினம் நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 95 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 35 பேருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே காய்ச்சல், மூச்சுத் திணறல் காரணமாக தொட்டியம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சியப்பன் (வயது 56) என்பவர் நேற்று முன்தினம் காலை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொளஞ்சியப்பன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கொளஞ்சியப்பன் உடலை தொட்டியத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மருத்துவமனை ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலை பார்த்த உறவினர்கள், அவர் கொளஞ்சியப்பன் இல்லை என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்சில் கொளஞ்சியப்பன் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த உடலை மீட்டு மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் கொளஞ்சியப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும், இறந்த நபர் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலர்(52) என்பதும் தெரியவந்தது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கொளஞ்சியப்பன் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொளஞ்சியப்பனை அங்கிருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அன்று மதியம் 3 மணியளவில் சிகிச்சைக்காக கொரோனா வார்டுக்கு அழைத்து வரப்பட்ட பாலரை, கொளஞ்சியப்பன் சிகிச்சை பெற்ற படுக்கையில் கிடத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே காலையில் இருந்த ஊழியர்கள் பணி முடிந்து சென்று, இரவு நேர பணிக்குரிய ஊழியர்கள் வந்தனர். மேலும் கொளஞ்சியப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாலருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதுபோன்ற காரணங்களால் காலையில் சிகிச்சைக்கு வந்த கொளஞ்சியப்பன்தான் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் என நினைத்து அவரது வீட்டுக்கு மருத்துவமனை ஊழியர்கள் பாலரின் உடலை பாலித்தீன் பையால் மூடி ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி விட்டனர்.

பின்னர் பாலர் உடலின் மேல் மூடப்பட்டுள்ள பாலித்தீன் பையை அகற்றிபார்த்த கொளஞ்சியப்பனின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்ததும் தெரியவந்தது. கொரோனா தொற்று இல்லாத இவர், மூச்சுச்திணறல் ஏற்பட்டு இறந்ததும், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் அவரது உடலை கொளஞ்சியப்பன் வீட்டுக்கு அனுப்பி வைத்ததும் தெரிந்தது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பாலரின் உடலை, ஆம்புலன்சில் ஏற்றி அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருப்பவரின் வீட்டுக்கு, இறந்தவரின் உடலை அனுப்பி வைத்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story