கீழப்புலியூர் கோவிலில் குத்துவிளக்கு - மணிகள் திருடிய தம்பதி கைது


கீழப்புலியூர் கோவிலில் குத்துவிளக்கு - மணிகள் திருடிய தம்பதி கைது
x
தினத்தந்தி 30 Sept 2020 10:55 AM IST (Updated: 30 Sept 2020 10:55 AM IST)
t-max-icont-min-icon

கீழப்புலியூர் கோவிலில் குத்துவிளக்கு மற்றும் மணிகளை திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட முருகன்குடி பிரிவு பாதை அருகே மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து, அதில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், இருளர் நகரை சேர்ந்த வீராச்சாமியின் மகன் சத்தியமூர்த்தி(வயது 37), அவருடைய மனைவி தேவி(36) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுடைய வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் மணிகள் மற்றும் குத்துவிளக்கு ஆகியவற்றை வைத்திருந்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரித்தபோது, அவர்கள் கீழப்புலியூர் பெரியாண்டவர் கோவிலில் குத்துவிளக்கு மற்றும் மணிகளை திருடியது, தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து சத்தியமூர்த்தி, தேவியை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குத்து விளக்கு மற்றும் மணிகளை பறிமுதல் செய்தனர்.

Next Story