நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்தும் சாலை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள் - நீண்டகால கோரிக்கை நிறைவேறுவது எப்போது?


நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்தும் சாலை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள் -  நீண்டகால கோரிக்கை நிறைவேறுவது எப்போது?
x
தினத்தந்தி 30 Sept 2020 11:11 AM IST (Updated: 30 Sept 2020 11:11 AM IST)
t-max-icont-min-icon

நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்தும் சாலை வசதியின்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை எப்போது நிறைவேறும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தென்கச்சி பெருமாள் நத்தம் ஊராட்சியை சேர்ந்த மேலக்குடிகாடு கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் உள்ளன. சுமார் தொல்லாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த கிராமத்தில் மண் பாதைகள் மட்டுமே உள்ளன. போக்குவரத்துக்கான சாலை வசதி நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

மேலக்குடிகாடு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பசுக்கள் வளர்க்கப்பட்டு அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில்லறையாக பால் விற்பனை செய்யப்படுகிறது. கும்பகோணம், ஜெயங்கொண்டம், அரியலூர் பகுதிகளுக்கு மொத்த விற்பனைக்காக பால் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் கொள்ளிடக்கரையில் மழை பெய்து சேறும், சகதியுமாக இருக்கும்போது பால் கேன்கள் இணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களோடு செல்லும் பால் வியாபாரிகள் பலர் ஆற்றுப்படுகையில் சறுக்கி விழுந்துள்ளனர்.

ஆற்றங்கரையில் அமைந்துள்ளதால் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் இந்த கிராம மக்களால் மூன்று போகம் நெல் உற்பத்தி செய்ய முடிகிறது. விவசாயத்திற்கு தேவைப்படும் விதை மற்றும் உரம் போன்றவற்றை தா.பழூர் அல்லது அணைக்கரை பகுதிகளுக்கு சென்று வாங்கி வந்து விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். உற்பத்தி செய்த நெல்மணிகளை விற்பனை செய்ய தா.பழூர் அரசு கொள்முதல் நிலையத்திற்கோ அல்லது இடைத்தரகர்களிடமோ கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் தா.பழூர் மற்றும் அணைக்கரை வழியாக பல்வேறு ஊர்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் கொள்ளிடக்கரையில் சே றும், சகதியுமாக இருக் கும் பாதையில் சென்று வருவது மாணவ, மாணவிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் மருத்துவமனைக்கு செல்ல, கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, கடை வீதிக்கு சென்று மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கி வர என எந்த தேவையாக இருந்தாலும் தா.பழூர் பகுதிக்குத்தான் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே தங்கள் பகுதிக்கு கொள்ளிடக் கரையின் மேல் தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

மேலக்குடிகாடு மக்களின் பிரதான போக்குவரத்து பாதையாக உள்ள கொள்ளிட கரைமீது தார் சாலை அமைக்கப்பட்டால் வாழைக்குறிச்சி, அடிக்காமலை, மேலக்குடிகாடு, தென்கச்சிபெருமாள்நத்தம், கீழக்குடிகாடு, அண்ணங்காரம்பேட்டை, சோழமாதேவி, கோடாலிகருப்பூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல மிகுந்த உதவியாக இருக்கும். எனவே சுதந்திர இந்தியாவில் கடந்த 73 ஆண்டுகளாக சாலை வசதி வேண்டும் என கோரி வரும் தங்களின் ஏக்கம், இனியாவது அரசின் கவனத்தை ஈர்க்குமா? தார் சாலை வசதி கிடைக்குமா? என்று எதிர்பார்த்து இப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

Next Story