மாத்தூர் அருகே தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி விபத்தை மறைத்ததை கண்டித்து முற்றுகை


மாத்தூர் அருகே தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி விபத்தை மறைத்ததை கண்டித்து முற்றுகை
x
தினத்தந்தி 30 Sept 2020 12:30 PM IST (Updated: 30 Sept 2020 11:48 AM IST)
t-max-icont-min-icon

மாத்தூர் அருகே தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி இறந்தார். விபத்தை மறைத்த தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆவூர்,

திருச்சி காஜாமலையை சேர்ந்தவர் திருமலை. இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மாத்தூர் அருகே ராசிபுரத்தில் இரும்பு பொருட்கள் தயாரிக்கும் திருமலை என்ற பெயரில் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு மாத்தூர் மற்றும் ராசிபுரத்தைச் சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் என 25 பேர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வழக்கம் போல நேற்று காலை தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ராசிபுரத்தைச் சேர்ந்த சந்திரன் மனைவி ரேணுகாதேவி (வயது 32) என்பவர் ஒரு இரும்பு வெட்டும் எந்திரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் கீழே குனிந்த போது எதிர்பாராதவிதமாக அவரது தலை முடி எந்திரத்தில் சிக்கியதைதொடர்ந்து, அவரது உடலும் இழுக்கப்பட்டு எந்திரத்தில் சிக்கியது.

இதில் பலத்த காயம் அடைந்த ரோணுகாதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் எந்திரத்தை நிறுத்தி அவரது உடலை மீட்டனர். பின்னர் தொழிற்சாலை நிர்வாகத்தினர் இந்த விபத்து பற்றி அவரது உறவினர்களுக்கோ, போலீசாருக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்காமல் ரேணுகா தேவியின் உடலை மீட்டு ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அங்கு விபத்து ஏற்பட்டதற்கான தடயங்களையும் அழித்ததுடன் தொழிற்சாலையை இழுத்துப்பூட்டி தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சகதொழிலாளர்கள் ராசிபுரத்தில் உள்ள ரேணுகா தேவியின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து ராசிபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.

இதை அறிந்த கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன், குளத்தூர் தாசில்தார் பழனிசாமி, மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தொழிற்சாலை நிர்வாகத்தினரை வரவழைத்து தொழிற்சாலையை திறந்து விபத்து எப்படி ஏற்பட்டது என்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் சமாதானம் பேசி அவர்களை அங்கிருந்து கலைந்து போக வைத்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 2 மணி அளவில் மாத்தூர் மற்றும் ராசிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாத்தூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி உயிரிழந்த ரேணுகா தேவியின் குழந்தைகள் மற்றும் கணவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், விபத்து மற்றும் தடயங்களை அழித்த தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் இடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உயிரிழந்த ரேணுகா தேவியின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் மாத்தூர் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story