ஊட்டியில், மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக குழு ஆய்வு


ஊட்டியில், மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக குழு ஆய்வு
x
தினத்தந்தி 30 Sept 2020 3:00 PM IST (Updated: 30 Sept 2020 2:53 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக குழு ஆய்வு செய்தது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு அடுத்த ஆண்டு 150 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பப்பட உள்ளது.

இதனால் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஒரு குழுவை நியமித்தது. இந்த குழுவின் அமைப்பாளரான கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி துணை முதல்வர் டாக்டர் முருகேசன் தலைமையில் டாக்டர் முத்துக்குமரன், சேலம் மோகன குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் ரவி ஆகியோர் நேற்று ஊட்டியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவ கல்லூரி, மருத்துவமனை, மாணவர்கள் விடுதி உள்ளிட்டவற்றை அமைப்பதற்கான திட்ட வரைபடங்களை பார்வையிட்டனர். பின்னர் முதல் பிளாக் கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு செய்தனர்.

அதன்பிறகு குழு அமைப்பாளர் டாக்டர் முருகேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

வரைபடங்களில் கட்டிடங்கள் அமைய உள்ள இடங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இயற்கை எழிலில் மாணவர்கள் படிப்பதற்கு உகந்த இடமாக உள்ளது. ஒவ்வொரு பணியும் திட்டமிட்டு நடந்து வருகிறது. மருத்துவ குழுவினராகிய நாங்கள் ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். அடுத்த ஆண்டு மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட உள்ளதால் உடற்கூறியல், உடல் இயக்கவியல், உடல் வேதியியல் ஆகிய 3 துறைகளுக்கான கட்டிடங்கள் கட்டும் பணியை 6 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 2 வகுப்பறைகள், ஒரு தேர்வு எழுதும் அறை அமைக்கப்பட இருக்கிறது. அறையில் 180 மாணவர்கள் போதுமான சமூக இடைவெளி விட்டு தேர்வு எழுதலாம்.

கல்லூரிக்கும், மருத்துவமனைக்கும் இடையே 200 மீட்டர் தொலைவு உள்ளது. மாணவர்கள் நடந்து வரும் வகையில் ஒரு பாலமும், வாகனங்கள் செல்லும் வகையில் சாலையில் மேல் ஒரு பாலமும் கட்டப்படுகிறது. மருத்துவமனையில் கட்டிடங்களை விட திறந்தவெளி அதிகமாக உள்ளது. வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். மைதானம், ஜிம்னாஸ்டிக் போன்றவை அமைக்கப்படுகிறது. விரைவில் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story