காரியாபட்டி அருகே, முடுக்கன்குளம் கண்மாய் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி போராட்டம்
காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே உள்ள முடுக்கன்குளம் பெரிய கண்மாய் 5 கிலோ மீட்டர் நீளமுடையது. இந்த கண்மாய் மூலம் ஆயிரம் ஏக்கர் பாசனம் நடைபெறுகிறது. சென்ற ஆண்டு குடிமராமத்து மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த கண்மாயில் பணிகள் நடைபெற்றன. ஆனால் வி.நாங்கூர் முதல் முடுக்கன்குளம் வரை உள்ள வரத்துகால்வாய் முழுவதுமாக செப்பனிடப்படவில்லை.
அப்போது பொதுமக்கள் பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை வைத்தபோது இந்த ஆண்டு கால்வாய் பணி செய்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை செய்யப்படவில்லை. மேலும் வி.நாங்கூர் கண்மாய் முதல் முடுக்கன்குளம் கண்மாய் வரை செல்லும் வரத்து கால்வாய் பாதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும் முறையாக வரத்து கால்வாயை வருவாய்த்துறையினர் அளவீடு செய்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முடுக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பஸ் நிலையம் அருகே ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலறிந்த காரியாபட்டி தாசில்தார் தனக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், போலீஸ் பாதுகாப்போடு வருவாய்த்துறையினரை வைத்து வரத்து கால்வாயை அளவீடு செய்து கொடுக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைவில் வரத்து கால்வாய் செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story