தொடர் மழையால் இளையான்குடி பகுதியில் விவசாய பணியை தொடங்கிய விவசாயிகள்


தொடர் மழையால் இளையான்குடி பகுதியில் விவசாய பணியை தொடங்கிய விவசாயிகள்
x
தினத்தந்தி 30 Sept 2020 4:00 PM IST (Updated: 30 Sept 2020 3:54 PM IST)
t-max-icont-min-icon

கடந்த சில நாட்களாக பெய்த மழையை பயன்படுத்தி இளையான்குடி பகுதியில் விவசாய பணிகளில் ஆர்வம் காட்ட விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

இளையான்குடி,

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களும் வறட்சியான மாவட்டங்களாகவே இருந்து வருகிறது. இந்த இரு மாவட்டங்களில் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவ மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதுதவிர சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம் உள்ளிட்ட பகுதியில் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவ மழையானது நன்றாக பெய்தால் மட்டுமே இந்த பகுதியில் குடிதண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும். இதுதவிர இந்த பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மழையும் நிலத்தடி நீர்மட்டத்தை உயரும் வகையில் இருக்கிறது.

இந்தநிலையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காரைக்குடி, இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த நீர்நிலைகளான ஊருணி, கண்மாய், குளங்கள் மற்றும் வயல்வெளி உள்ளிட்டவைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தரிசாக இருந்த தங்களது வயல்களை சீரமைத்து உழவார பணியை தொடங்கி உள்ளனர். இதில் இளையான்குடி மற்றும் அதை சுற்றியுள்ள புக்குழி, மாதவநகர், சாலைக்கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தற்போது விவசாயிகள் தங்களது நிலங்களில் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். இதில் சில விவசாயிகள் நீர் விதைப்பு பணியை மட்டும் தொடங்கி உள்ளனர். சில விவசாயிகள் நெல் பயிரிடுவதற்காக தங்களது வயல்களில் உழவு மாடு மற்றும் டிராக்டர் மூலம் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து இளையான்குடி பகுதியை சேர்ந்த விவசாயி மதியரசன் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் வறண்டு கிடந்த கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி உழவு பணியில் ஆர்வமாக தொடங்கி உள்ளோம். தொடர் மழையினால் எனது வயல்களில் தேங்கிய தண்ணீரை பயன்படுத்தி நீர் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன். வரும் காலங்களில் தொடர்ந்து இந்த பகுதியில் மழை பெய்தால் அதை பயன்படுத்தி இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயத்தை தயக்கம் இல்லாமல் தொடங்குவார்கள். மேலும் தற்போது விவசாய பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதுமான விதை மற்றும் உரங்கள் ஆகியவற்றை இருப்பு வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story