அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 264 பேருக்கு புதிய வீடுகள் - கலெக்டர் வீரராகவராவ் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 264 பேருக்கு புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்து உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் வசித்து வரும் ஆக்கிரமிப்புதாரர்களை மறுகுடியமர்வு செய்யும் பொருட்டு பட்டிணம்காத்தான் திட்டப்பகுதியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 264 குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி ராமநாதபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் ஆக்கிரமிப்புதாரர்கள் மற்றும் சமுதாயத்தில் நலிவடைந்த வீடற்ற நகர்ப்புற ஏழைகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளாக பயன்பெற முடியும்.
பயனாளிகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக இருத்தல் வேண்டும், மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மேலாண்மை, சென்னை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், இயக்குனரின் ஒப்புதல் பெறப்பட்டு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற ஒரு குடியிருப்பிற்கு ஆகும் கட்டுமானத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை போக மீதமுள்ள தொகையை பயனாளியின் பங்களிப்புத் தொகையாக வாரியத்திற்கு செலுத்தும்பட்சத்தில் பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story