மணல் கடத்தலை தடுக்க மத்திய அரசின் விதிகளை அமல்படுத்தலாமா? தமிழக அரசு பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு


மணல் கடத்தலை தடுக்க மத்திய அரசின் விதிகளை அமல்படுத்தலாமா? தமிழக அரசு பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Sept 2020 4:30 PM IST (Updated: 30 Sept 2020 4:16 PM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலை தடுக்க மத்திய அரசின் விதிமுறைகளை பயன்படுத்தலாமா என்பது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்க தடை விதித்து கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவு தற்போது வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் சவடு மண் எடுக்கவும், உவரி மண் எடுக்கவும் என அனுமதி பெற்றுவிட்டு மணல் கடத்தப்படுகிறது.

எனவே சவடு, உவரி மண் எடுக்க அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மணல் கடத்தலை தடுக்க கடந்த 14-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என அரசு தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் தகவல் தொடர்பு சரிவர கிடைக்காததால், நீதிபதிகளின் கேள்விக்கு அரசு தரப்பு வக்கீல் உரிய பதிலை வீடியோ கான்பரன்சிங் மூலம் தெரிவிக்க முடியவில்லை.

இதையடுத்து நீதிபதிகள், கடந்த 14-ந்தேதி இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு தொடர்பான பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு மணல் கடத்தலை தடுப்பது தொடர்பாக வகுக்கப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதா அல்லது மணல் கடத்தலை தடுக்க தமிழக அரசே புதிய விதிகளை ஏற்படுத்தப்போகிறதா என்பது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Next Story