சொத்து கேட்டு மகன் தகராறு: வயதான தம்பதி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி


சொத்து கேட்டு மகன் தகராறு: வயதான தம்பதி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 30 Sep 2020 11:15 AM GMT (Updated: 30 Sep 2020 11:10 AM GMT)

சொத்து கேட்டு மகன் தகராறு செய்ததால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயன்றனர்.

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வயதான தம்பதி வந்திருந்தனர். திடீரென்று அவர்கள் தங்கள் பையில் மறைத்து வைத்து இருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை தங்கள் மீது ஊற்றினர். அதனை பார்த்த பத்திரிகையாளர்கள் உடனே அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்து சத்தமிட்டனர். இந்த சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் மீது போலீசார் தண்ணீர் ஊற்றி விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் வாடிப்பட்டி அருகே உள்ள எர்ரம்பட்டியை சேர்ந்த பாண்டியன் (வயது 67) மற்றும் அவரது மனைவி ராஜா பொண்ணு (60) என்பது தெரிந்தது.

மேலும் அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு சந்திரசேகரன் என்ற மகனும், முருகஜோதி மற்றும் சுகுணா என்ற 2 மகள்களும் உள்ளனர். அதில் சந்திரசேகரனுக்கு மாதேஷ் என்ற மகனும், கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர். அவரது மனைவி இறந்து விட்டார். இதனால் சந்திரசேகரன் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் சேர்ந்து வசித்து வருகிறார். எனவே நான் எனது பேரப்பிள்ளைகளின் நலன் கருதி எங்களுக்கு சொந்தமான சொத்துக்களை எனது பேரன் மாதேஷ் மற்றும் கனிஷ்கா பெயரில் உயில் எழுதி வைத்து விட்டேன். ஆனால் இந்த உயிலை ரத்து செய்து விட்டு, எனது பெயரில் சொத்துகளை எழுதி தரும்படி எனது மகன் சந்திரசேகரன் தொடர்ந்து மிரட்டி வந்தான்.

நான் இது குறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் அங்குள்ள பெண் இன்ஸ்பெக்டர், எனது மகனிடம் லஞ்சம் பெற்று கொண்டு அவனுக்கு சாதகமாக கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். அவனது பெயரில் சொத்துகளை எழுதினால், விற்றுவிடுவான் என்ற அச்சத்தில் நாங்கள் மறுத்து விட்டோம். சொத்து கேட்டு தினமும் சந்திரகேகரன் எங்களை மிரட்டி வந்தான். மேலும் எங்களை வீட்டில் இருந்து விரட்டி விட்டான்.

எனவே நாங்கள் தோட்டத்து வீட்டில் போய் தங்கி இருந்தோம். அங்கும் வந்து தென்னை மரங்களை வெட்டி விட்டு எங்களையும் விரட்டி விட்டான். நாங்கள் தற்போது சாலை ஓரங்களில் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகிறோம். எனவே வேறு வழியின்றி நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் வந்து தீக்குளித்தோம். ஆனால் அதற்குள் எங்களை தடுத்து விட்டனர். மூத்த குடிமக்களான எங்களை கொடுமைப்படுத்தும் எனது மகன் மீதும், அவனுக்கு உடந்தையாக இருக்கும் அலங்காநல்லூர் பெண் இன்ஸ்பெக்டர் மீதும் கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story