வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரசு அலுவலகங்கள் முன்பு வருகிற 12-ந் தேதி மறியல் போராட்டம் - முத்தரசன் அறிவிப்பு


வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரசு அலுவலகங்கள் முன்பு வருகிற 12-ந் தேதி மறியல் போராட்டம் - முத்தரசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Sept 2020 5:45 PM IST (Updated: 30 Sept 2020 5:44 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு வருகிற 12-ந் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

கும்பகோணம்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநிலக்குழு கூட்டம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு எதிராக, தொழிலாளர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்து மாநிலக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வருகிற 12-ந் தேதி மாவட்ட, வட்ட, ஒன்றிய தலை நகரங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும்.

தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் வேளாண் சட்டங்கள் இந்தியாவில் விவசாயிகளை கூண்டோடு அழிக்கக்கூடியது. தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகள் எதிர்காலத்தில் இருக்க கூடாது என்றும், தொழிற்சங்கமோ, தொழிற்சங்க அமைப்புகளோ இருக்கக்கூடாது என மத்திய அரசு கருதுவதால் தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

இந்த போராட்டத்துக்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள கலாசார அமைப்பு ஆர்.எஸ்.எஸ். கொள்கையோடு உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு(2021) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை தி.மு.க. கூட்டணியான மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து தான் சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story