நாஞ்சிக்கோட்டை பகுதியில், வேகமாக பரவும் கொரோனா - ஊராட்சி நிர்வாகம் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கை


நாஞ்சிக்கோட்டை பகுதியில், வேகமாக பரவும் கொரோனா - ஊராட்சி நிர்வாகம் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Sept 2020 5:15 PM IST (Updated: 30 Sept 2020 6:03 PM IST)
t-max-icont-min-icon

நாஞ்சிக்கோட்டை பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க ஊராட்சி நிர்வாகம் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாஞ்சிக்கோட்டை,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியை சரிவர கடைபிடிப்பதில்லை. மேலும் இங்கு வசிப்பவர்கள் அறியாமையால் வைரஸ் தொற்று குறித்து கவலைப்படாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல், மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சுய மருத்துவம் செய்து கொள்கின்றனர். நாஞ்சிக்கோட்டை பகுதியில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 7 பேர் இறந்து உள்ளனர். தற்போது இங்குள்ள பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

கொரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த தண்டோரா மூலமாக அறிவிப்பது, ஒலிபெருக்கி வழியாக பொது மக்களுக்கு தெரிவிப்பது, துண்டு பிரசுரங்கள் வழங்குவது, தெருக்கூத்து மற்றும் கலை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றை செய்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என பொது நல விரும்பிகள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஊராட்சி தலைவர் சத்யராஜ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பொதுமக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பதற்காக ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் எச்சரிக்கை விடுத்து வருகிறோம். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதியில் கடை வைத்திருப்பவர்களிடம், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக சானிடைசர் வழங்க வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளோம். அரசு வழங்கியுள்ள விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

Next Story