தாயை கொன்று உடல் எரிப்பு: ‘வீட்டை விட்டு வெளியே போக சொன்னதால் அடித்து கொலை செய்தேன்’ சரணடைந்த தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்


தாயை கொன்று உடல் எரிப்பு: ‘வீட்டை விட்டு வெளியே போக சொன்னதால் அடித்து கொலை செய்தேன்’ சரணடைந்த தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 30 Sept 2020 7:45 PM IST (Updated: 30 Sept 2020 7:39 PM IST)
t-max-icont-min-icon

தாயை கொன்று உடலை எரித்த வழக்கில் சரணடைந்த தொழிலாளி, ‘வீட்டை விட்டு வெளியே போக சொன்னதால் அடித்து கொலை செய்தேன்’ என்று போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

எலச்சிப்பாளையம்,

திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடி ஊராட்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பங்கஜம் (வயது 60). திருமண தரகர். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரகாஷ். கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்தினருடன், தாய் பங்கஜத்திற்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 22-ந் தேதி பிரகாஷ் தனது தாய் பங்கஜத்தை இரும்பு குழாயால் அடித்து கொலை செய்தார். மேலும் அவரது உடலை எடுத்து சென்று வீட்டின் முன்பு விறகுகளை அடுக்கிவைத்து எரித்தார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தப்பியோடிய பிரகாஷை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்து வந்த பிரகாஷ் நேற்று தோக்கவாடி கிராம நிர்வாக அலுவலர் வரதராஜிடம் சரணடைந்தார். அவரை கிராம நிர்வாக அலுவலர் திருச்செங்கோடு ஊரக போலீசில் ஒப்படைத்தார். அப்போது போலீசார் பிரகாஷிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன.

போலீசாரிடம் பிரகாஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில் விபரம் வருமாறு:-

சிறுவயதிலேயே எனது தந்தை தட்சிணாமூர்த்தி இறந்து விட்டதால் என்னையும், எனது தம்பி சக்தியையும், தாய் பங்கஜம் திருமண தரகர் தொழில் செய்து காப்பாற்றி வந்தார். தொழிலில் கிடைத்த வருமானம் மூலம் விநாயகபுரத்தில் மனை ஒன்றை வாங்கி வீடு கட்டினார். இடைப்பட்ட காலத்தில் எனக்கும், என் தம்பிக்கும் திருமணம் செய்து வைத்தார். தம்பி திருமணம் முடிந்தவுடன் தனிக்குடித்தனம் சென்ற நிலையில், நான் எனது குடும்பத்தினர் மற்றும் தாயுடன் விநாயகபுரம் வீட்டில் வசித்து வந்தேன்.

சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது, எனது மனைவி முத்துலட்சுமி, தாய் பங்கஜம் எங்களை வீட்டை விட்டு வெளியே போக சொன்னதாக கூறினார். இதுகுறித்து எனது தாயிடம் கேட்டபோது, ‘இது என் வீடு, நீயும் வீட்டை விட்டு வெளியே போ’ என்று கூறினார். பின்னர் அனைவரும் மாடியில் உள்ள குடிசையில் படுத்து தூங்கினோம்.

நள்ளிரவில் நான் எழுந்து சென்று என் தாயிடம், ஏன் எங்களை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறாய் எனக்கேட்டு தகராறு செய்தேன். அதற்கு அவர், இப்பொழுதே உன் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியே போ, உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

இதில் ஆத்திரம் அடைந்த நான் அருகில் இருந்த இரும்பு குழாயை எடுத்து அவரின் மண்டையில் ஓங்கி அடித்தேன். இதில் ரத்தம் வெளியேறி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனை பார்த்த என் மனைவியை, இதுகுறித்து வெளியில் சொன்னால் உன்னையும் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு, உடனடியாக இதனை மறைக்க உடலை எடுத்து சென்று கீழே இருந்த கொட்டகையில் தீ வைத்து எரித்தேன்.

அதிகாலை 4.30 மணி ஆனதால் அக்கம் பக்கத்தினர் எழுந்து வந்து கேட்ட போது, கொட்டகைக்குள் பாம்பு புகுந்து விட்டது. அதனால் தீவைத்து விட்டேன் என கூறினேன். பின்னர் உடல் எரிந்து சாம்பலானவுடன், சாம்பலை ஒரு மூட்டையில் கட்டி எடுத்து சென்று கொட்டினேன். அதைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டேன். போலீசார் தேடுவதை அறிந்ததும் தற்போது சரணடைந்தேன்.

இவ்வாறு அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அவரை கைது செய்த திருச்செங்கோடு ஊரக போலீசார், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை நீதிபதி சவுமியா மேத்யூ சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பிரகாஷை போலீசார் பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story