திருப்பூர் கஞ்சம்பாளையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
திருப்பூர் கஞ்சம்பாளையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட கஞ்சம்பாளையம் அறிவொளி நகர் பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பா.ஜ.க.வினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் நேற்று காலை அப்பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் சம்பவ இடத்துக்கு மாநகராட்சி உதவி கமிஷனர் செல்வநாயகம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொதுமக்கள் தரப்பில் கூறும்போது ‘நல்லாற்றை ஒட்டி இருப்பதால் இப்பகுதியில் மழை காலங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. போதுமான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். சாலை வசதி அமைத்து கொடுக்க வேண்டும். இது குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. தற்போது மழைக்காலமாக இருப்பதால் ரோட்டில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். கழிவுநீர் வீட்டுக்குள் செல்வதால் மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். நல்லாற்றை தூர் வார வேண்டும்’ என்று கூறினார்கள்.
பின்னர் உதவி கமிஷனர் செல்வநாயகம் பேசும்போது ‘அறிவொளி நகர் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் குடிநீர் வினியோகம் முறைப்படுத்தப்படும். இப்பகுதியில் சாலை புதிதாக அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பாதாளசாக்கடை பணிகள் நிறைவடைந்ததும் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். தனியாருக்கு சொந்தமான இடத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொசு புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் புகை மருந்து அடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் நிலத்தில் கழிவுநீர் தேங்காத வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தனியாருக்கு நோட்டீஸ் வழங்கப்படும்’ என்றார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story