மார்த்தாண்டத்தில் துணிகரம்: மோட்டார் சைக்கிள் வாங்குவது போல் வந்து திருடி சென்ற வாலிபர் - கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீஸ் விசாரணை


மார்த்தாண்டத்தில் துணிகரம்: மோட்டார் சைக்கிள் வாங்குவது போல் வந்து திருடி சென்ற வாலிபர் - கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 30 Sep 2020 4:30 PM GMT (Updated: 30 Sep 2020 4:27 PM GMT)

மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிளை வாங்குவது போல் நடித்து மர்ம நபர் திருடி சென்றார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நூதன திருட்டு குறித்த விவரம் வருமாறு:-

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்தவர் திவிக்சன் (வயது 30). இவர் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் மூலம் வாகனங்கள் வாங்க கடன் கொடுப்பது, பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பது போன்றவை செய்து வருகிறார். இங்கு நேற்று 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மோட்டார் சைக்கிள் வாங்குவதாக வந்தார். அந்த நபர் நிறுவன ஊழியரிடம், ‘ஒரு மோட்டார் சைக்கிள் விலைக்கு வேண்டும்’ என்று கேட்டார். ஊழியர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை காட்டினார்.

அப்போது, அந்த நபர் ஒரு குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளை வாங்க விரும்புவது போல் பாவனை செய்து விலை பேசினார். அதை சிறிது தூரம் ஓட்டி பார்க்க விரும்புவதாக கூறி சாவியை கேட்டார். அவரது பேச்சை நம்பிய ஊழியர் சாவியை கொடுத்தார்.

தொடர்ந்து அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவே இல்லை. அவர் அந்த மோட்டார் சைக்கிளுடன் மாயமானார்.

நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வராததால் தான்னை ஏமாற்றி மோட்டார் சைக்கிளை திருடி சென்றதை ஊழியர் உணர்ந்தார். திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.1½ லட்சம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊழியர் உடனடியாக உரிமையாளர் திவிக்சனுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் திவிக்சன் அங்கு விரைந்து சென்றார்.

இது குறித்து திவிக்சன் மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சியை கைப்பற்றிய போலீசார் நூதன முறையில் திருடி சென்ற ஆசாமியை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Next Story