அத்வானி உள்பட 32 பேரும் விடுதலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு


அத்வானி உள்பட 32 பேரும் விடுதலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு
x
தினத்தந்தி 1 Oct 2020 3:35 AM IST (Updated: 1 Oct 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ள தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு, நேற்று குற்றம்சாட்டப்பட்ட அத்வானி உள்பட 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை முதல்-மந்திரி எடியூரப்பா வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சி.பி.ஐ. கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. பா.ஜனதா மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேரையும் விடுதலை செய்துள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல் இல்லை என்று கோர்ட்டு கூறியுள்ளது. இதன் மூலம் உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அதனால் இந்த தீர்ப்பை கேட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

நல்ல உதாரணம்

தீர்ப்பு எப்படி வருமோ என்று பலர் காத்திருந்தனர். ஆனால் போராட்டக்காரர்களுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். அன்றைய தினம் அத்வானி ஆற்றிய உரையை மறக்க முடியாது. தற்போது அயோத்தியில் ராமர்கோவில் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மூலம் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. நான் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story