மேடவாக்கத்தில் வேன் டிரைவர் வெட்டிக்கொலை


மேடவாக்கத்தில் வேன் டிரைவர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 1 Oct 2020 5:00 AM IST (Updated: 1 Oct 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

மேடவாக்கத்தில் வேன் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மேடவாக்கம் பாபுநகர் சி.பி.ஐ. காலனி ரவி தெருவில் உள்ள காலி மைதானத்தில் 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக அப்பகுதியினர் பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சபரிநாதன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்தனர்.

சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மேடவாக்கம் ரங்கநாதபுரம் பகுதிக்கு சென்று ஜான்சி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பின்னர் போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.

அதில் கொலை செய்யப்பட்ட வாலிபர், மேடவாக்கம் ரங்கநாதபுரத்தை சேர்த்த டில்லிபாபு (வயது 23) என்பது தெரியவந்தது. லோடு வேன் டிரைவரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு சென்று தூங்கிவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற டில்லிபாபுவை 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டிச்சென்றது. இதனால் அவர்களிடம் இருந்து தப்பி காலி மைதானத்திற்குள் சென்ற டில்லிபாபுவை அந்த கும்பல் மடக்கி தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றதும், இதில் படுகாயம் அடைந்த டில்லிபாபு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பள்ளிக்கரணை போலீசார் டில்லிபாபுவிடம் தகராறு செய்தவர்களை தேடி சென்றபோது அவர்கள் தலைமறைவானதும் தெரிந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அழகு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கொலையான டில்லிபாபு மீது கடந்த 2017-ம் ஆண்டு பள்ளிக்கரணை போலீசில் அடிதடி வழக்கு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் மேடவாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story