தாழையூத்து போலீஸ் கோட்டத்தில் 85 கண்காணிப்பு கேமராக்கள் போலீஸ் டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்


தாழையூத்து போலீஸ் கோட்டத்தில் 85 கண்காணிப்பு கேமராக்கள் போலீஸ் டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Oct 2020 5:08 AM IST (Updated: 1 Oct 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

தாழையூத்து போலீஸ் கோட்டத்தில் 85 கண்காணிப்பு கேமராக்களை போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு நேற்று தொடங்கி வைத்தார்.

மானூர்,

நெல்லை மாவட்டம் தாழையூத்து போலீஸ் கோட்டத்தில் உள்ள 8 போலீஸ் நிலைய பகுதிகளில் புதிதாக 85 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா நேற்று மானூர் போலீஸ் நிலையத்தில் நடந்தது. நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு தலைமை தாங்கி, புதிய கண்காணிப்பு கேமராக்களை இயக்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “இதுபோன்ற கண்காணிப்பு கேமராக்களால் குற்றவாளிகளை கண்டறிய முடிவதால், குற்றங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது. இப்பகுதியில் 85 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது“ என்றார்.

எதிர்பார்ப்பு

மானூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த 42 கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் இயக்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, “ விஞ்ஞான தொழில்நுட்பம் எவ்வளவு வளர்கிறதோ, அதே அளவில் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதே நேரம் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வளர்ந்துள்ளது. குற்றங்களை கண்டுபிடிக்க கேமராக்கள் பெரிதும் உதவுவதால், இதனை மூன்றாவது கண் என்கிறோம். ஒரு கண்காணிப்பு கேமரா 4 போலீஸ்காரர்களுக்கு சமம். குற்றங்களை தடுப்பதில் பொதுமக்களின் பங்கு முக்கியமானது ஆகும். சாலை விதிகளை மதிப்பதன் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும். பொதுமக்களுக்கு போலீஸ் எல்லா விதத்திலும் உறுதுணையாய் இருக்கும்“ என்றார்.

விழாவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க உதவிய நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கம், வியாபாரிகள் சங்க பிரமுகர்கள் ஆகியோருக்கு போலீசார் பொன்னாடை அணிவித்து பாராட்டினர். தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story