போடிமெட்டு மலைப்பாதை வழியாக கேரளா சென்ற தொழிலாளர்களுக்கு அனுமதி மறுத்ததால் பரபரப்பு


போடிமெட்டு மலைப்பாதை வழியாக கேரளா சென்ற தொழிலாளர்களுக்கு அனுமதி மறுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Oct 2020 6:12 AM IST (Updated: 1 Oct 2020 6:12 AM IST)
t-max-icont-min-icon

போடிமெட்டு மலைப்பாதை வழியாக கேரளா சென்ற தொழிலாளர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போடி,

கேரளாவில் ஏராளமான ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களுக்கு வேலைக்கு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தினமும் சென்று வருகின்றனர். அவர்கள் போடி மெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய மலைப்பாதைகள் வழியாக கேரளாவுக்கு செல்கின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது குமுளி மலைப்பாதை வழியாக மட்டுமே தொழிலாளர்கள் அனுமதிக் கப்படுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை போடிமெட்டு மலைப்பாதை வழியாக ஜீப்களில் தொழிலாளர்கள் ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்றனர். அவர்களை போடிமெட்டு சோதனை சாவடியில் கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் குமுளி மலைப்பாதை வழியாக செல்வதற்கு இ-பாஸ் வைத்திருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மூணாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. போடிமெட்டு சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு சோதனை மையம் இல்லை. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை பரிசோதனை செய்ய முடியாது. மேலும் குமுளி வழியாக செல்வதற்கு அனுமதி வாங்கி விட்டு, போடிமெட்டு மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்க முடியாது என்றனர். இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து தொழிலாளர்களிடம் கேட்டபோது, போடி மெட்டு மலைப்பாதை வழியாக சென்றால் மட்டுமே பயண நேரமும், செலவும் குறையும். தற்போது ஏலக்காய் தோட்டங்களில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே கூலித்தொழிலாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். எனவே போடிமெட்டு மலைப்பாதை வழியாக கேரளாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர்.

Next Story