அரசு, தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை கலெக்டர் கிரண்குராலா தகவல்


அரசு, தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை கலெக்டர் கிரண்குராலா தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2020 7:41 AM IST (Updated: 1 Oct 2020 7:41 AM IST)
t-max-icont-min-icon

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

கள்ளக்குறிச்சி,

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டபடிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்த, சீர் மரபினர் ஆகிய இனத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை மாணவ-மாணவிகள் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் புதுப்பித்தலுக்கு வருகிற நவம்பவர் 10-ந் தேதிக்குள்ளும், புதிய இனங்களுக்கு 30-ந் தேதிக்குள்ளாகவும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.

மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். www.tn.gov.in/hembcdept என்ற இணையதளத்திலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story