ஜெயங்கொண்டம் அருகே சாலை வசதி இல்லாத குஞ்சிதபாதபுரம் கிராம மக்கள்


ஜெயங்கொண்டம் அருகே சாலை வசதி இல்லாத குஞ்சிதபாதபுரம் கிராம மக்கள்
x
தினத்தந்தி 1 Oct 2020 10:27 AM IST (Updated: 1 Oct 2020 10:27 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே குஞ்சிதபாதபுரம் கிராம மக்கள் சாலை வசதியில்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது குஞ்சிதபாதபுரம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு சாலை வசதி இல்லை. அதுமட்டுமின்றி இவர்கள் பயன்படுத்தும் பாதை மழைக்காலங்களில் மிகவும் சேறும், சகதியுமாக மாறி மோட்டார் சைக்கிள்கள் கூட செல்ல முடியாமல், நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது வழுக்கி விழுந்து காயம் அடைந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மேலூர், சூரியமணல், புதுக்குடி செல்ல பெரும்பாலான மக்கள் ஜெயங்கொண்டம் மின் வாரிய அலுவலகம் அருகே உள்ள குஞ்சிதபாதபுரம் பாதையையே குறுக்குப் பாதையாக பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்தப் பாதையில் மழை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் இருப்பதாலும், அதனைக் கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சுற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.

அவசர, அத்தியாவசிய தேவைக்காக கடைவீதிக்கு செல்ல அப்பகுதி மக்கள் இன்றளவும் மின்சார வாரிய வளாகத்திற்குள் சென்று மெயின் ரோட்டை கடந்து செல்கின்றனர். எனவே குஞ்சிதபாதபுரம் மக்கள் பயன்பெறும் வகையில் தற்காலிகமாக மழை மற்றும் கழிவு நீர் வாய்க்காலில் குழாய்பாலம் அமைத்து தார் சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொது சுகாதாரம் கருதி ஜெயங்கொண்டம்-குஞ்சிதபாதபுரம் செல்லும் சாலையை பிரிக்கும் வாய்க்காலில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி உள்ளதை வெளியேற்றி தூய்மை காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story