ராஜபாளையத்தில், ரூ.20 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்
ராஜபாளையத்தில் ரூ.20 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களால் பொது மக்கள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். குழாய் பதிக்கும் பணிகள் முடிந்த பகுதிகளில் புதிய சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நேற்று ரூ.20.04 கோடி மதிப்பில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை செய்து பணிகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள், ஜெ.பேரவை நகர செயலாளர் வக்கீல் முருகேசன், நகர செயலாளர் பாஸ்கரன், ஆர்.56 பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் வனராஜ், துணைத்தலைவர் கிருஷ்ணராஜ், அரசு ஒப்பந்ததாரர் ஏ.கே.ஆர். கன்சக்சன் உரிமையாளர் காமராஜ், ராஜ் பிரியம், ஜி.கே. டிரேடர்ஸ் உரிமையாளர் நவரத்தினம், நடிகர் சேத்தூர் விஜயகுமார், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள், நகர ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு ராஜபாளையம் மற்றும் விருதுநகர் ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட 3 ரெயில்வே பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் செய்து முடித்த பின்னரே வெளியே சொல்வோம். தி.மு.க.வை பொறுத்த வரை நாங்கள் போராட்டம் செய்ததால் தான் பணிகள் நடைபெற்றது என கூறுவது தவறு. ராஜபாளையம் நகர மக்களுக்கு தேவையான நல்ல குடிநீர், தரமான சாலை, சுகாதாரமான வாழ்க்கை ஆகியவை செய்து தரப்படும்.
தி.மு.க. கூட்டத்தில் ஆ.ராசா தொண்டர் ஒருவரை திட்டி உள்ளார். ராசா வாழ்க என கூறியதற்கே அவர் திட்டுகிறார் என்றால், ஒழிக என்று கூறினால் என்ன செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேத்தூரை சேர்ந்த பேரூராட்சி மாணவரணி செயலாளர் பாலமுருகன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு சென்ற அமைச்சர், அவரது மனைவியிடம் தன் சொந்த நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கினார். மேலும் அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story