40 கிராமங்களில், மழை வேண்டி முளைப்பாரி திருவிழா
பரமக்குடி பகுதியில் மழைவேண்டி 40 கிராமங்களில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
பரமக்குடி,
கிராமப்புறங்களில் மழை வேண்டி ஒவ்வொரு ஆண்டும் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தொற்றால் ஏராளமான கிராமங்களில் முளைப்பாரி திருவிழா நடத்தவில்லை. சில கிராமங்களில் தாமதமாக நடத்தப்பட்டு வருகிறது.அதையொட்டி பரமக்குடி தாலுகாவிற்குட்பட்ட அரியனேந்தல், பொட்டிதட்டி, சேமனூர், பார்த்திபனூர், இடையர் குடியிருப்பு உட்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் தலையில் முளைப் பாரியை சுமந்தபடி ஊர்வலம் வந்து கோவிலின் முன்பு வைத்து கும்மி அடித்து அம்மனை வழிபட்டனர். ஆண்கள் ஒயிலாட்டம் ஆடினர். பின்பு மறுநாள் மாலையில் மீண்டும் முளைப்பாரி எடுத்துச் சென்று ஊர்களில் வெட்டப்பட்டிருந்த குளங்களில் கொட்டினர்.
அரியனேந்தல் கிராமத்தில் நடந்த முளைப்பாரி திருவிழாவில் யூனியன் துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் மணிமுத்து, துணைத் தலைவர் பாப்பா சிவக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், கிராம தலைவர் ராமு, செயலாளர் சவுந்திரபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
Related Tags :
Next Story