பர்கூர் அருகே அம்மா நகரும் நியாய விலைக்கடை - கலெக்டர் தொடங்கி வைத்தார்


பர்கூர் அருகே அம்மா நகரும் நியாய விலைக்கடை - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Oct 2020 6:45 PM IST (Updated: 1 Oct 2020 6:32 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே அம்மா நகரும் நியாய விலைக் கடையை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.

பர்கூர்,

பர்கூர் தாலுகா கந்திகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் கூட்டுறவுத்துறை சார்பில் அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடக்க விழா நடைபெற்றது. இதை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்தானம் வரவேற்றார்.

இதில், பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர் ராஜதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் கனகராஜ், பர்கூர் கூட்டுறவு சார் பதிவாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ஞானபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மகிழரசி ஜெய்பிரகாஷ், ஊராட்சி செயலாளர் நாகராஜ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 507 முழு நேர நியாய விலைக்கடைகள், 521 பகுதி நேர நியாய விலைக் கடைகள், 30 மகளிர் நியாய விலைக்கடைகள் என மொத்தம் 1,058 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் பொருட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்க தொகுதிவாரியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் 31, பர்கூர் தொகுதியில் 29, வேப்பனபள்ளி தொகுதியில் 28, ஊத்தங்கரை தொகுதியில் 27, ஓசூர் தொகுதியில் 19, தளி தொகுதியில் 34 நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கந்திகுப்பம் நியாய விலைக்கடையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காமராஜ் நகரில் உள்ள பொதுமக்களுக்கு, அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காமராஜ் நகரில் உள்ள 175 குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் முதல் மற்றும் இரண்டாவது வியாழக்கிழமைகளில் இவ்விடத்தில் நகரும் நியாய விலைக்கடை மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். அப்போது பெற இயலாதவர்கள் கந்திகுப்பம் நியாய விலைக் கடையின் வேலை நாட்களில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

Next Story