மாவட்டத்தில் புதிய உச்சம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 161 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 5,489 ஆக அதிகரித்தது


மாவட்டத்தில் புதிய உச்சம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 161 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 5,489 ஆக அதிகரித்தது
x
தினத்தந்தி 1 Oct 2020 7:15 PM IST (Updated: 1 Oct 2020 7:13 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,489 ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 5,327 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே சேலத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,328 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் நேற்று நாமக்கல்லை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர், பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், நல்லிபாளையம் கிராம உதவியாளர், கலெக்டர் அலுவலக ஊழியர், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக டிரைவர், ராமாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உள்பட 161 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. வழக்கம்போல் நேற்றும் நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,489 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 154 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 4,351 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 72 பேர் பலியான நிலையில், 1,066 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத வகையில் 161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவி வரும் கொரோனாவால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story