மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பரபரப்பு: பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர், மகனுடன் தற்கொலை முயற்சி - போலீசார் தடுத்து நிறுத்தினர்


மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பரபரப்பு: பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர், மகனுடன் தற்கொலை முயற்சி - போலீசார் தடுத்து நிறுத்தினர்
x
தினத்தந்தி 1 Oct 2020 8:45 PM IST (Updated: 1 Oct 2020 8:42 PM IST)
t-max-icont-min-icon

பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக பெண் ஊழியர் மகனுடன் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னார்குடி, 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் ஆனந்தி(வயது 37). இவர், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கடந்த 4 வருடங்களாக பணிபுரிந்து வந்தார். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ரசீது போடும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியை ஆனந்தி செய்து வந்தார்.

இந்த நிலையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த திட்டத்தில் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்தது அம்பலமானது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. பல அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆனந்தி பணிநீக்கம் செய்யப்பட்டார்.

எனவே தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக்கோரி மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று காலை தனது 8 வயது மகன் ரிஷிரோகனுடன் ஆனந்தி வந்தார். கையில் மண்எண்ணெய் கேனுடன் வந்த அவர், அலுவலக வாசலில் அமர்ந்து தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். இல்லையென்றால் தனது மகனுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது உடல் மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மன்னார்குடி போலீசார் ஆனந்தியை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அப்புறப்படுத்தினர்.

இது குறித்து ஆனந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது குறித்து எதிர்க்கட்சியினர் கொடுத்த அழுத்தத்தால் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக உயர் அதிகாரிகள் செய்த தவறுக்கு தற்காலிக பணியாளரான என்னை வேலையிலிருந்து நீக்கி பலிகடா ஆக்கி விட்டனர். எனவே நான் பணி நீக்கப்பட்டதற்கு எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் தனது மகனுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story