கொரடாச்சேரி பகுதியில் பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன - தண்ணீரில் மூழ்கி அழுக வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் கவலை
கொரடாச்சேரி பகுதியில் பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுக வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கொரடாச்சேரி,
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் குறுவை சாகுபடி 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பு ஆழ்குழாய் பாசனத்தின் மூலம் நடைபெற்ற முன்பட்ட குறுவை அறுவடை தற்போது முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணை தண்ணீர் மூலம் நடைபெற்ற குறுவை சாகுபடி அறுவடைக்கு தயாராகி வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த குறுவை நெற்பயிர்கள் அறுவடை செய்யப்படும்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக கொரடாச்சேரி பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கொரடாச்சேரி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் கதிர் விட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து விட்டன. சாய்ந்த பயிர்கள் தண்ணீரில் கிடப்பதால் பயிர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் மட்டும் 100 ஏக்கர் பரப்பளவில் இதைப்போல பயிர் பாதிக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆறுகளிலும் அதிக அளவு தண்ணீர் செல்வதால் மழைநீரை வடிய வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒருசில நாட்களில் ஆற்றில் வரும் நீரின் அளவு குறைந்து அதன்பிறகு வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய வாய்ப்புள்ளது. இதனால் ஓரிரு நாட்கள் சாய்ந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டியிருக்கும்.
இதனால் பயிர்கள் அழுக வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் தண்ணீரில் சாய்ந்த இடங்களில் மகசூல் குறையும் என விவசாயிகள் தெரிவித்தனர். எனவே தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் வயல்களில் இருந்து தண்ணீரை வடிய வைக்கும் வகையில் ஆறுகளில் தண்ணீர் மேலாண்மையை பொதுப்பணித்துறையினர் சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story