கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு: கூடுதல் கட்டிடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் அறிவுறுத்தல்
கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கூடுதல் கட்டிடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனருமான என்.சுப்பையன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வெள்ளம் மற்றும் புயல் காலங்களில் மக்களை தங்க வைக்கும் பொருட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 251 நிவாரண முகாம்களை ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 8 புயல் பாதுகாப்பு மையங்களில் மின்சாரம், குடிநீர், கழிவறை ஆகிய அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா தொற்று காலம் என்பதால் போதிய இடைவெளியுடன் மக்கள் தங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான கூடுதல் கட்டிடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர், தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், உதவி கலெக்டர் பாலசந்தர், பயிற்சி கலெக்டர் அமித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story