பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: தஞ்சை பெரியகோவிலில் போலீஸ் பாதுகாப்பு - ரெயில் நிலையங்களிலும் சோதனை


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: தஞ்சை பெரியகோவிலில் போலீஸ் பாதுகாப்பு - ரெயில் நிலையங்களிலும் சோதனை
x
தினத்தந்தி 1 Oct 2020 9:30 PM IST (Updated: 1 Oct 2020 9:16 PM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி தஞ்சை பெரியகோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில் நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

தஞ்சாவூர்,

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில்களில் போலீசார் ஏறி சோதனை செய்தனர். பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

தண்டவாளங்கள், நடைமேடைகளில் வெடிகுண்டு எதுவும் இருக்கிறதா? என சோதனை நடத்தினர். சாதாரண உடையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் கும்பகோணம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமின்றி உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பக்தர்களின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். வழக்கத்தை விட கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல் மாவட்டம் முழுவதும் முக்கியமான கோவில்கள், மசூதிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தஞ்சை பெரியகோவில் அருகே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் இந்து மக்கள் கட்சியினர் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதேபோல் வல்லத்தில் உள்ள ஜீம்ஆ பள்ளிவாசல் மற்றும் மேலப்பள்ளிவாசலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story