தொழிலாளர்கள் முகக்கவசம் அணியவில்லை: 2 தேயிலை தொழிற்சாலைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சப்-கலெக்டர் அதிரடி


தொழிலாளர்கள் முகக்கவசம் அணியவில்லை: 2 தேயிலை தொழிற்சாலைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சப்-கலெக்டர் அதிரடி
x
தினத்தந்தி 1 Oct 2020 9:45 PM IST (Updated: 1 Oct 2020 9:37 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்கள் முகக்கவசம் அணியாததால் 2 தேயிலை தொழிற்சாலைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சப்-கலெக்டர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்பு வழிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் குன்னூர் அருகே கரும்பாலத்தில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். இதனால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத 2 தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் தொழிற்சாலைக்கு தினமும் பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும். அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவி சுத்தப்படுத்தி கொள்ள வேண்டு என்று அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து குன்னூரில் உள்ள ஒரு மதுக்கடையில் அவர் ஆய்வு செய்தார். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக மதுப்பிரியர்களை நிற்க வைத்தது தெரியவந்தது. பின்னர் அந்த மதுக்கடைக்கு ரூ.500 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து அரசு பஸ்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்று சப்-கலெக்டர் ரஞ்சித்சிங் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொலக்கொம்பையில் இருந்து குன்னூரை நோக்கி வந்த ஒரு அரசு பஸ்சில் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். இதனால் அரசு பஸ் கண்டக்டருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

குன்னூர் அருகே எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அளக்கரை கிராமத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை எஸ்டேட் அமைக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கலெக்டர் உத்தரவின் பேரில் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் ஏற்கனவே 30 சென்ட் மீட்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று அளக்கரை கிராமம் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை எஸ்டேட் அமைக்கப்பட்ட இடத்துக்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது அந்த நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த தேயிலை செடிகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து 18 சென்ட் நிலம் மீட்கப்பட்டு வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் என்றும் மற்றவர்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை என்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

Next Story