மத்திய அரசின் கலாசார ஆய்வுக்குழுவை கலைக்க கோரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் - திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் நடந்தது


மத்திய அரசின் கலாசார ஆய்வுக்குழுவை கலைக்க கோரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் - திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 1 Oct 2020 10:00 PM IST (Updated: 1 Oct 2020 9:47 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் கலாசார ஆய்வுக்குழுவை கலைக்க கோரி கோவை பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன் திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கோவை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கலாசார ஆய்வுக்குழுவை கலைக்க கோரியும், இந்த குழுவில் ஒரு தமிழர் கூட இடம்பெறாததை கண்டித்தும் திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில், கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. ஆதி தமிழர் பேரவை மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 80-க்கும் மேலானவர்கள் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக வந்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது கலாசார ஆய்வுக்குழுவை கலைக்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டம் குறித்து பண்பாட்டு கூட்டியக்க நிர்வாகிகள் கூறியதாவது:-

உலகம் முழுவதும் 13 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசுஅமைத்துள்ள மத்திய கலாசார ஆய்வு குழுவில் ஒரு தமிழர் கூட இடம்பெறவில்லை. இது கண்டிக்கத்தக்கது. எனவே கலாசார ஆய்வு குழுவை உடனடியாக கலைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் திராவிடர் தமிழர் கட்சி நிறுவனர் வெண்மணி, மக்கள் அதிகா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, திராவிடர் விடுதலை கழக மாநகர் மாவட்ட தலைவர் நேருதாஸ், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், எஸ்.டி.பி.யு. ஆட்டோ தொழிற்சங்க் கோவை மாவட்ட தலைவர் ரவூப் நிஸ்தார், எஸ்.டி.பி.ஐ. ஜி.எம். நகர் பகுதி துணைத்தலைவர் மெகராஜ் தீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தையொட்டி போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் தலைமையில் 50-க்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story