பாறைக்குழியை மண் கொட்டி மூடக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் சமரசம்
திருப்பூரில் பாறைக்குழியை மண்கொட்டி மூட வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளியங்காடு கே.எம். நகர் பகுதியில் பாறைக்குழி உள்ளது. இந்த பாறைக்குழியில் மாநகராட்சி பகுதியில் குவியும் குப்பைகளை லாரிகளில் ஏற்றி கொண்டு வந்து கொட்டி வந்தனர். குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதியினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். மேலும் மண் கொட்டி பாறைக்குழியை மூட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
கடந்த 6 மாதத்துக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம், பாறைக் குழியை மண்கொட்டி மூடுவதாக உறுதியளித்தது. ஆனால் இதுவரை பாறைக்குழி மூடாமல் இருந்தது. பாறைக்குழியை மண் கொண்டு மூட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பொம்முதுரை தலைமையில் 20 பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.
கே.எம். நகர் பாறைக்குழியை மண் கொண்டு மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக மாநகராட்சி சுகாதார அதிகாரி ராஜேந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சின்னத்துரை, ராமகிருஷ்ணன், திருப்பூர் தெற்கு போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
சுகாதார அதிகாரி ராஜேந்திரன் பேசும்போது ‘கடந்த இரண்டு நாட்களாக குப்பை கொட்டும் பணி கே.எம். நகர் பாறைக் குழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், லாரிகளில் மண் கொண்டு வந்து நிரப்பும் பணிகள் தொடங்கி விட்டது‘ என்று பொது மக்களிடம் தெரிவித்தார். மேலும் இன்னும் ஒரு வாரத்துக்குள் பாறைக்குழி குப்பைகளின் மேல்பகுதியில் மண்ணை போட்டு மூடப்படும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமரசம் ஏற்பட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story